செய்திக்கொத்து

2 mins read
c7419eaf-aab1-4085-b8d2-29d6b89153bd
-

போலி சாதி சான்று தாக்கல் செய்த எம்எல்ஏ பதவி நீக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதியான தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் மட்டுமே இந்தத் தொகுதியில் போட்டியிட முடியும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாவின் தந்தை அந்தோணியும், தாய் எஸ்தரும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ராஜாவின் மனைவி ஷைனி பிரியாவும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர்களது திருமணம் கிறிஸ்துவ மத முறைப்படிதான் நடந்தது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆந்திர பிரதேச சட்டப்பேரவையில்

எம்எல்ஏக்கள் மீது தாக்குதல்

அமராவதி: ஆந்திர மாநில வரவுசெலவுத் திட்ட அறிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நேற்று முன்தினம் காலையில் கூடியதும், பொதுக் கூட்டம், ஊர்வலம், பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்க வேண்டுமென்று தெலுங்கு தேசம் கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர். இதற்கு சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் அனுமதி வழங்கவில்லை. இதனால், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அவர்களுடன் ஆளும் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்கு அடிதடி ஏற்பட்டது. இதில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் பால வீராஞ்சநேய சுவாமி மற்றும் புச்சைய்ய சவுத்ரி ஆகியோர் தாக்கப்பட்டதாக அந்த கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர்.

பாகுபாட்டைக் கண்டித்து 2 நாட்கள் போராட்டம்: மம்தா பானர்ஜி

கோல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுக்கிறது. மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டத்திலும் மேற்கு வங்கத்திற்கு எதுவும் இல்லை. எனவே, மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து போராட்டம் நடைபெறும். கோல்கத்தாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக இந்த போராட்டம் நடைபெறும். வரும் 29ஆம் தேதி தொடங்கும் போராட்டம் 30ஆம் தேதி மாலை நிறைவுபெறும்,'' என அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.