லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களை ஒடுக்க மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரபல குண்டர்களான விஜய் மிஸ்ரா, முக்தார் அன்சாரி, சுசில் மூச், பதான் சிங் படூ, சுந்தர் பதி, சுனில் ரதி, துருவ் சிங், அனுபம் துபே, உட்பட குண்டர் கும்பலைச் சேர்ந்த 64 பேர் சட்டவிரோதமாக ஈட்டிய ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்தத் தகவலை அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை உயர் அதிகாரியான பிரசாத் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
குற்றச் செயல்களிலோ அல்லது சட்டத்துக்கு விரோதமாகவோ செயல்பட்டால் அதை உ.பி காவல்துறை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று அந்த அதிகாரி எச்சரித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்தர் அன்சாரியின் ரூ.523 கோடி மதிப்பிலான சொத்துகளும், அத்திக் அகமதுவின் ரூ.413 கோடி சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அடிதடி, அச்சுறுத்தல், நிலத்தைப் பிடுங்குதல், சட்டவிரோத மாக வணிகம் செய்தல் போன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வந்த குண்டர் கும்பலைச் சேர்ந்த 64 பேர் மற்றும் அவர்களின் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மாதத்துக்கு இரு முறை டிஜிபி அலுவலகம் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நிலக்கரி தொழிலை சட்டவிரோதமாக நடத்தும் கும்பல்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும் முடக்கப்பட்டன.
இது தவிர 18 குண்டர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பலர் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றார் பிரசாத்.

