சண்டிகார்: பஞ்சாப்பில் 'அனந்த்புர் கல்சா ஃபவுஜ்' என்ற பெயரில் தீவிரவாதக் குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் கடந்த நான்கு நாட்களாகத் தேடி வருகின்றனர்.
அவரது ஆதரவாளர்கள் 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் அம்ரித்பால் சிங் மட்டும் காவல்துறையிடம் சிக்காமல் தப்பிவருகிறார்.
இந்நிலையில் ஜலந்தரில் உள்ள டோல்கேட் கண்காணிப்பு கேமராவில் கடந்த சனிக்கிழமை பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது, மெர்சிடிஸ் எஸ்யூவி வாகனத்தில் முன் இருக்கையில் அம்ரித்பால் சிங் அமர்ந்துள்ளார். அதன்பின் அவர் மாருதி பிரஸ்ஸா வாகனத்தில் வேறு உடையில் இருக்கிறார். அதன்பின் பாரம்பரிய மத உடையை மாற்றிவிட்டு பேண்ட், சட்டை அணிந்து தலைப்பாகையை மாற்றி மோட்டார் பைக்கில் தப்பிச்சென்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் முயற்சி தொடர்வதால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க கைத்தொலைபேசி சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதை செவ்வாய்க்கிழமை வரை பஞ்சாப் அரசு நீட்டித்தது.

