புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்காரியின் மும்பை அலுவலகத்திற்கு ரூபாய் 10 கோடி கேட்டு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் விடுத்தவரை அடையாளம் கண்டு கைதுசெய்யும் நடவடிக்கையை மகாராஷ்டிரா காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
இந்த மிரட்டலை அடுத்து நாக்பூரில் உள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாக்பூரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு புதன்கிழமை காலையிலும் மாலையிலும் ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ரூ.10 கோடி வேண்டும். கொடுக்காவிட்டால் நிதின் கட்காரியை தாக்குவேன் என்று மிரட்டினார்.
இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். நிதின் கட்காரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி புஜாரி எனக் கூறி ஒருவர் நிதின் கட்காரி அலுவலகத்துக்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்.
அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

