திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவுக்கு மூன்று பேர் பலி
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டங்களும் உஷார்படுத்தப் பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைய சில நாள்களாக கொரோனா தொற்றுப்பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொரோனா பாதிப்பை உறுதி செய்வதற்கான அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார்.
மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மட்டும் கேரளாவில் 176 பேருக்கும் புதன்கிழமை 201 பேருக்கும் தொற்றுப்பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று பேர் தொற்றுப்பாதிப்பால் பலியாகிவிட்டனர்.
திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், தொற்றுப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் 1,026 பேரில் 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள் ளன.
தொற்றுப்பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

