புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 120 நாள்களுக்குள் 125 மாநகரங்களுக்கு அது விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மின்னிலக்கத் தொழில்நுட்பம் மிக எளிதானது, பாதுகாப்பானது, வெளிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் 6ஜி தகவல் தொழில்நுட்பத் தொலைநோக்குத் திட்ட அறிக்கையை வெளியிட்ட பிரதமர், நாட்டில் நூறு கோடி கைப்பேசிகள் பயன்பாட்டில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
"5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஆறு மாதங்களுக்குள் 6ஜி தொழில்நுட்பம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். 4ஜி தொழில் நுட்பத்திற்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு நாடாக மட்டுமே இந்தியா இருந்தது.
"தற்போது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியாளராக நாம் மாறி இருக்கிறோம்," என்றார் பிரதமர் மோடி.
"2014ல் நாட்டில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. அது தற்போது 85 கோடியாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இணைய பயன்பாடு அதிகமாக உள்ளது," என்றார் பிரதமர் மோடி.

