புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணியை உருவாக்குவதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
அவரது ஏற்பாட்டில் நேற்று டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி தேவை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சரத் பவார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க பல்வேறு முயற்சிகளை தனித்தனியே மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஒருமித்த கருத்துடன் எதிர்க்கட்சிக் கூட்டணி அமைவதில் சிக்கல் நிலவி வருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர்களுக்கு சரத் பவார் அழைப்பு விடுத்திருந்தார். சுதந்திரமான, வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்துவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமாக செயல்படுதல், அவற்றின் செயல்திறன் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தேர்தல் ஆணையம் அதனை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சரத் பவார்.

