செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b0d36219-71e7-4b93-a635-477a58dcd2f8
-

கட்டடம் இடிந்து விபத்து: மூவர் பலி

அமராவதி: மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு சிறார்கள் உள்பட மூன்று பேர் பலியான சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்த அந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், ஐந்து பேர் காயமடைந்தனர். காவல்துறையும் தீயணைப்புப் படை வீரர்களும் மேற்கொண்ட மீட்புப் பணியால் பலர் காப்பாற்றப்பட்டனர்.

திருப்பதி கோவில் வருவாய் ரூ.4,411 கோடியாக இருக்கும் என கணிப்பு

அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருவாய், 2023-24 நிதியாண்டில் ரூ.4,411 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.1,591 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில் வைப்பு நிதியாக உள்ள பணத்திற்கு கிடைக்கும் வட்டித்தொகை ரூ.990 கோடி, பிரசாத விற்பனை மூலம் கிடைக்கும் ரூ.500 கோடி, தரிசன நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் ரூ.330 கோடியும் மொத்த வருவாயில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கோவில் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ.1,530 கோடியும் பொருள்கள் கொள்முதலுக்கு ரூ.690 கோடியும் செலவாகும் எனக் கோவில் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

11.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் சுமார் 11.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்துலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்ட தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 153,000 சிற்றூர்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 9.34 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.