புதுடெல்லி: மிக விரைவில் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப் போவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்ட்பர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அதானி குழும நிறுவனம் குறித்தோ அல்லது வேறு ஏதேனும் இந்திய நிறுவனங்கள் பற்றியோ அந்த ஆய்வு நிறுவனம் புதிய தகவல்களை வெளியிடுமா எனும் பரபரப்பு நிலவி வருகிறது.
அண்மையில் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவல்களால் அதானி குழும நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.
பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் முற்றிலுமாக மறுத்திருந்தது. இந்த விவகாரம் காரணமாக, இந்திய அரசியல் களத்திலும் பரபரப்பு நிலவி வருகிறது. அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு இது குறித்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அதானி குழும முறைகேடுகள் எனக் குறிப்பிட்டு, ஆய்வறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், மிக விரைவில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைதான் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவானது, அந்நிறுவனத்துக்கு நற்சான்றிதழ் அளிக்கும் குழுவாகவே இருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி நிறுவனம் குறித்து மத்திய அரசிடம் இதுவரை 99 கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளன என்றார்.
தற்போது நூறாவது கேள்வியைக் கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டு நலன் கருதி இந்த விவகாரம் குறித்து விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மத்திய அரசு நியாயமாக செயல்படுமா என்பதே அந்தக் கேள்வி என்றார்.
"அதானி விவகாரத்தில் கடந்த 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால், அக்குழுவுக்கு விசாரணைக் குழுக்கள் மீது முறைப்படியான அதிகாரவரம்பு கிடையாது.
"நண்பர்களுடனான நெருக்கம் பற்றியோ, நண்பர்களை செழிப்பாக்க ஆட்சியை பயன்படுத்தியது குறித்தோ விசாரிக்க அந்த நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை," என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

