திருப்பதி: இந்திய மாநிலங்களில் பரவலாக வசித்து வரும் 16 கோடியே 80 லட்சம் பேரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, விற்பனை செய்துள்ள ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட பல்வேறு தகவல்களையும் ஒரு கும்பல் திருடி வருவதாக தெலுங்கானா காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் பகுதி குற்றத் தடுப்புக் காவலர்கள், தனி நபர் தகவல் திருட்டு, தகவல் விற்பனை தொடர்பாக வழக்குப் பதிந்து ஏழு பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர்.
மூன்று நிறுவனங்களை உருவாக்கிய இந்தக் கும்பல், அவற்றின் துணையுடன் ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட விவரங்கள், கைப்பேசி எண்கள், பான் கார்டு விவரங்கள், வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டு உட்பட பலதரப்பட்ட விவரங்களைத் திருடி, அவற்றை இணைய மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இம்மோசடியில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குமார் நித்திஷ் பூஷண், பூஜா பால், சுஷில் தோமோர், அத்துல் பிரதாப் சிங், முஸ்கான் ஹசன், சந்தீப் பால், ஜியாவுல் ரஹ்மான் ஆகிய ஏழு பேரையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடம் இருந்து ஆதார் அட்டைகள், 13 கைப்பேசிகள், மூன்று மடிக் கணினிகள் உட்பட ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

