புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தங்களுக்கு எதிராக கண்மூடித்தனமாகப் பயன்படுத்தி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் இணைந்து நேற்று மனுத் தாக்கல் செய்தன.
காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ராஷ்டிரிய சமிதி, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனுவைத் தாக்கல் செய்தன.
எதிர்க்கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை ஏப்ரல் 5ஆம் தேதி நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு வியாழக்கிழமை அன்று இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல எதிர்க்கட்சியினர் நேற்று மாலை திட்டமிட்டிருந்தனர்.
கடந்த 2019ல் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி என பணத்தை அபகரித்த அனைவரது பெயர்களுக்குப் பின்னாலும் ஏன் மோடி என்ற பெயர் உள்ளது? என கேள்வி எழுப்பினார்.
இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குஜராத் மாநிலம், சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி வழக்குத் தொடர்ந்தார்.
மோடி என்ற சமூகத்தை ராகுல் காந்தியின் பேச்சு அவமதித்துவிட்டதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிபதி எச்எச் வர்மா ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் இளைஞர் காங்கிரசார் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி, பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சாலைமறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அரசியல் உள்நோக்கத்துடன் ராகுலுக்குச் சிறை விதித்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் சாடியுள்ளனர்.

