புதுடெல்லி: ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்திற்கு அவரின் கர்மவினை காரணமாக இருக்கலாம் என்று அசாம் முதல்வர் கூறியுள்ளார்.
அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, கவுஹாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு எதிராக 2013ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு அவசர சட்ட மசோதாவை முன்மொழிந்தது.
"அப்போது அந்த அவசர சட்ட மசோதவை ராகுல் காந்தியே கிழித்துப் போட்டார். அவருடைய கர்மவினை அவரைத் திருப்பித் தாக்கியிருக்கலாம். அதில் என்ன தவறு இருக்கிறது," என்று வினவினார்.
2013ல் கொண்டு வரப்பட்ட அந்த மசோதவை ராகுல் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால், இப்போது அவர் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று அரசியல் கவனிப்பாளர்களும் கருதுகின்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய பாஜக அனைத்து வழிகளிலும் முயன்றது. உண்மை பேசுபவர்களை வைத்திருக்கும் பழக்கம் பாஜகவுக்கு கிடையாது.
"ஆனால் நாங்கள் தொடர்ந்து உண்மையைப் பேசுவோம். அவசியமெனில் நாங்கள் சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டோம்," என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டுவிட் செய்துள்ள, ராகுலின் சகோதரி பிரியங்கா, "பாஜக முதல்வர்களில் ஒருவர் ராகுல்காந்தியின் தந்தை யார்? என்று கேட்கிறார். அவருக்கு எந்த நீதிபதியும் 2 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்யவில்லை. ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர்.
"அதானியின் கொள்ளை பற்றியும் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பற்றியும் கேள்வி எழுப்பியதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
"எங்கள் குடும்பம் இந்திய மக்களுக்காக குரல் எழுப்பியது. உண்மைக்காகப் போராடியது. உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது," என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, 2018ல் தம்மை அவதூறாக பேசிய மோடிமீது வழக்குத் தொடரப் போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி கூறியுள்ளார்.
"2018ல் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகையுடன் என் சிரிப்பை ஒப்பிட்டு பேசினார்; இதுவும் அவதுாறுதான்," என்றார் அவர்.

