கோல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சந்தித்ததையடுத்து, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணி அமைக்கும் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
இச்சந்திப்பின்போது, திரிணாமூல் காங்கிரசும் மதசார்பற்ற ஜனதாதளமும் இணைந்து செயல்படுவது குறித்துப் பேசப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உடனான சந்திப்பின்போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல், பஞ்சரத்னா யாத்திரையின் வெற்றி, தேசிய அரசியல் உள்ளிட்டவை குறித்துப் பேசினோம்.
"கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய வருவதாக தெரிவித்தார். அதேபோல் தேசிய அளவில் திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி விவாதித்தோம்," எனப் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் வரும் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்த மூன்றாவது கூட்டணியை உருவாக்க முயற்சித்து வரும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் இணையத் தயங்குவதால், காங்கிரஸ் இல்லாத மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க மம்தா முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்-மம்தா சந்திப்பு, சென்ற வியாழக்கிழமை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்து பேசியது என அரசியல் வட்டாரத்தில் இவ்விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

