வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்

1 mins read
5ae9f862-c73f-40a8-a58b-329da017e5d1
-

புதுச்சேரி: பாஜக பிரமுகரும் உள்துறை அமைச்சரின் ஆதரவாளருமான செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான புதுச்சேரி, மங்களம் தொகுதியின் பாஜக மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் செந்தில்குமரன். இவர் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளராக இருந்தவர்.

இந்நிலையில், ஞாயிறன்று இரவு 10 மணியளவில் வில்லியனூரில் தன் வீட்டுக்கு அருகே இருக்கும் ரொட்டிக் கடையில் அவர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென்று செந்தில்குமரன் மீது வெடிகுண்டை வீசியுள்ளது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தவரை அவர்கள் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் பதறி அடித்து ஓடியுள்ளனர். கடைகள் உடனடியாக அடைக்கப்பட்ட நிலையில், செந்தில்குமரன் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு காவலர்கள் அனுப்பிவைத்தனர்.

சம்பவ இடத்துக்குத் திரண்ட செந்தில் குமாரின் உறவினர்களும் ஆதரவாளர்களும் கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.