வாரணாசி: பிரபல போஜ்புரி நடிகையும் மாடல் அழகியுமான ஆகாங்க்ஷா துபே, 25, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் ஞாயிறன்று (மார்ச் 26) மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சார்நாத் எனும் பகுதியில் உள்ள ஹோட்டலில் ஆகாங்க்ஷா தங்கியிருந்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
"அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த உடற் கூறு பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கவேண்டும்," என்று வாரணாசி காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆகாங்க்ஷா இறப்பதற்கு முதல் நாள், இன்ஸ்டகிராம் நேரலையில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அந்தக் காணொளியில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு தேம்பி அழுகிறார் ஆகாங்க்ஷா. அவர் மன ரீதியில் துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என இணையவாசிகள் பலரும் கூறிவருகின்றனர்.
இளம் நாயகியான ஆகாங்க்ஷா, இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் இடம்பெற்றிருந்த கடைசிப் பாடல், அவர் இறந்த சில மணி நேரத்தில் யூடியூப்பில் வெளியானது. விசாரணை தொடர்கிறது.

