இந்தியா-இலங்கைக்குப்
படகுப் போக்குவரத்து
கொழும்பு: இந்தியா- இலங்கைக்கு இடையிலான பயணிகள் படகுப் போக்குவரத்து அடுத்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி தொடங்க உள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து புதுச்சேரியின் காரைக்கால் வரையில் இயக்கப்படும் படகு மூலம் 4 மணி நேரத்தில் காரைக்காலுக்கு வரலாம் என்றும் படகுப் பயணிகள் ஒவ்வொருவரும் 100 கிலோ எடையிலான பொருள்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாலம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உத்தம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா ரயில்வே இணைப்புத் திட்டத்தின்கீழ் 35,000 கோடி ரூபாய் செலவில், 1,178 அடி உயரத்தில் இப்பாலம் கட்டப்படுகிறது. ஈபிள் கோபுரத்தை விட உயரமாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இருநாள் பயணமாக மேற்கு வங்கம் சென்ற அதிபர் முர்மு
கோல்கத்தா: இருநாள் பயணமாக மேற்கு வங்க மாநிலத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அதிபர் திரௌபதி முர்மு, அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திரநாத் தாகூரின் 'சாந்தி நிகேதன்' இல்லம் ஆகியவற்றுக்கும் சென்று அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல்கள் கூறின.
ஜி20 மாநாடு தொடர்பான கூட்டத்தைப் புறக்கணித்த சீனா
இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தின் ஓர் அங்கமாகக் கூறி அருணாசலப் பிரதேசத்தை தங்களுக்குச் சொந்தமான பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், இதனை இந்தியா ஏற்காமல் நிராகரித்துவிட்டது.
இந்நிலையில், ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடாநகரில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்துவிட்டதாக தகவல்கள் கூறியுள்ளன.

