புதுடெல்லி: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் மத்திய அரசு தனக்கு வழங்கியிருந்த பங்களாவை விரைவில் காலி செய்துவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
மக்களவையின் வீட்டு வசதிக் குழு துணைச் செயலாளர் டாக்டர் மோகித் ராஜனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றி உள்ளேன்.
கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் பங்களாவில் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை என்னால் என்றும் மறக்கமுடியாது. விதிமுறைகளுக்கு உட் பட்டு பங்களாவைக் காலி செய்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை அடுத்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு அறிவிப்புக் கடிதம் அனுப்பி இருந்ததை அடுத்து, பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில், ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 11வது நாளாக நேற்றும் முடங்கின.
அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் இந்தியாவை தரம் தாழ்த்தி விமர்சித்தது தொடர்பில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கின.
டெல்லியில் கறுப்புச் சட்டை அணிந்து பேரணி நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள், அதானி-பிரதமர் இடையிலான உறவு குறித்து கேள்வி எழுப்பியதால் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.
டெல்லி, மும்பை, கோல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போாராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம், கண்ணூரில் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர், சாலையில் டயர்களை எரித்தனர்.
இதையடுத்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் காங்கிரசாரை காவலர்கள் விரட்டியடித்தனர்.
குஜராத் சட்டப்பேரவைக்குக் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்த 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

