செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a8cd802d-7f4e-4230-8647-58c8ef354320
-

பெண்ணாக வழிபடும் ஆண்கள்

திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது கொட்டம்குளக்கரா தேவி கோயில். இங்கு நடைபெற்ற விளக்குத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்களாக வேடமிட்டு, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டனர். இதன்மூலம், செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது. கோயில் வாசலில் இருக்கும் ஒப்பனைக் கலைஞர்கள் ஒப்பனைகளைச் செய்துவிட்டனர். அழகிய பெண்ணாகத் தோன்றும் ஆண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மருந்துகளின் விலை உயர்கிறது

புதுடெல்லி: வலி நிவாரணி, ஆன்ட்டிபயாடிக்ஸ், இதய நோய் உள்ளிட்ட 900 மருந்துப் பொருள்களின் விலை வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் 12% உயர இருப்பதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

37 சாலைகளை அமைக்கத் திட்டம்

இடாநகர்: சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளத்துக்கு மேலும் 37 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.13,000 கோடி செலவில் அமைக்கப்படும் புதிய சாலைகளில் ஏறக்குறைய 70 விழுக்காடு அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் அமைய உள்ளது.

பக்தர்கள் வசதிக்காக 10 பேருந்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ₹18 கோடி மதிப்பிலான 10 மின்சாரப் பேருந்துகளை தனியார் பொறியியல் நிறுவனம் ஒன்று நன்கொடையாக வழங்கியுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருமலையில் பக்தர்கள் தங்கியுள்ள தங்குமிடங்கள், சாமி தரிசனம் உள்ளிட்ட இடங்களுக்கு இலவசமாக இயக்கப்படும் இந்தப் பேருந்துகள் இன்னும் பத்து நாள்களுக்குள் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வரும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கவிதாவை கைது செய்வதில் இருந்து தடை விதிக்க மறுப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான விற்பனைக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை இருமுறை விசாரணை நடத்தி உள்ளது. இவ்வழக்கில் தன்னைக் கைது செய்ய தடை விதிக்கக் கோரி கவிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கவிதாவுக்கு அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது.

சபரிமலை பக்தர்கள் 20 பேர் காயம்

நிலக்கல்: சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஒன்பது குழந்தைகள் உள்பட 64 பேர் பேருந்தில் சென்றிருந்தனர். தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 20 பக்தர்களும் கோட்டயம் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.