முன்னாள் எம்எல்ஏவான ரவுடிக்கு ஆயுள்; கடுங்காவல் தண்டனை

முன்னாள் எம்எல்ஏவான ரவுடிக்கு ஆயுள்; கடுங்காவல் தண்டனை

2 mins read
44237cc5-4488-4b2d-9581-a3a9acd0a500
-
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரவலாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த அத்திக் அகமது என்ற ரவுடிக்கு கடுங்காவல் தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது அங்குள்ள பிரயாக்ராஜ் நீதிமன்றம்.

உ.பி.யின் பிரயாக்ராஜ் பகுதி யைச் சேர்ந்தவர் அத்திக் அகமது, 60. இவர்மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவரது குடும்பத்தினர் மீதும் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், உமேஷ் பால் என்பவரைக் கடத்தியது தொடர்பில், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த அத்திக் அகமது உள்ளிட்ட மூவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, அத்திக் அகமதுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் இம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை அணுகும்படியும் தெரிவித்துவிட்டது.

கடந்த 2005ல் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொல்லப்பட்ட நிலையில், அத்திக் அகமதுக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.

சபர்மதி சிறையில் இருந்து நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட அத்திக் அகமது செய்தியாளர்களிடம் பேசிய போது, ''என்னை என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல உ.பி. காவலர்கள் திட்டமிட்டுள்ளனர்,'' என்று குற்றம்சாட்டி இருந்தார்.

சமூக விரோதச் செயல்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வரை அத்திக் அகமது சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பதிவுத் துறை ஆவணங்கள் அடிப்படையில் அவரது பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயர்களிலும் ரூ.11,684 கோடிக்கு சொத்துகள் உள்ளன. அந்தச் சொத்துகள் அனைத்தையும் உ.பி. அரசு முடக்கியுள்ளது.