புதுடெல்லி: இந்தியா 2022-23 நிதியாண்டில் வரலாற்றில் முதன்முறையாக US$760 பில்லியன் ஒட்டுமொத்த ஏற்றுமதி சாதனையை நிகழ்த்துவதாக மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் பொருளியல் சூழல்கள் சரியில்லை என்றாலும் இந்தியாவின் ஏற்றுமதி US$750 பில்லியனைக் கடந்துவிட்டதாகவும் இந்த மாத முடிவில் அது US$760 பில்லியன் அளவைத் தொட்டுவிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் 75வது சுதந்திர ஆண்டைக் குறிக்கும் வகையில் நடந்த 'அம்ரித்க் மோட்சவ்' கொண்டாட்டத்தின்போது, அமைச்சர் பெருமிதத்துடன் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பியூஷ் கோயல், கடந்த 9 ஆண்டுகளாக எவ்வித தடங்கலும் இல்லாத பொருளியல் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் அமலாகி வருவதாகக் குறிப்பிட்டார்.
வர்த்தகம், சேவைத் துறைகள் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், கடந்த 2020- 2021ஆம் நிதி ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி US$500 பில்லியனாக இருந்தது என்றார்.

