பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என அண்மைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஏபிபி-சிவோட்டர்ஸ் நடத்தி உள்ள இக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் கர்நாடகம் மட்டுமல்லாமல், தேசிய அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
எதிர்வரும் மே 10ஆம் தேதியன்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அடுத்த நிமிடமே அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தி்ல் வரிந்துகட்ட தொடங்கிவிட்டன.
கர்நாடகாவில் மொத்தம் 222 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இம்முறை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், இனி வரும் நாள்களில் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கர்நாடக மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் விதமாக பல்வேறு ஊடகங்கள், அமைப்புகள் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முதலில் ஏபிபி-சிவோட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் எனகருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மொத்தமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 115 முதல் 127 இடங்களில் வெற்றிபெறும் என்றும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
தற்போதைய ஆளுங்கட்சியான பாஜக 68 முதல் 80 தொகுதிகளைக் மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஜீ நியூஸ் ஊடகம் மேற்கொண்ட மற்றொரு கருத்துக் கணிப்பில், பாஜக 96 முதல் 106 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சி 88-98 இடங்களில் வெல்லும் என்றும் தெரியவந்துள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாத பட்சத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் புதிய ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

