ஜெய்ப்பூர்: ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்த ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் ஜெய்ப்பூர் நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது.
மொத்தம் ஐந்து பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனினும் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் அவர்களை விடுவித் தது.
கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
மொத்தம் 12 நிமிட இடை வெளியில் தொடர்ந்து எட்டு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்களை தீவிரவாதிகள் நிகழ்த்தினர். இதில் 71 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகளும் காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டதில் ஐந்து பேர் அடுத்தடுத்து கைதாகினர். ஐவர் மீதும் பதிவான வழக்குகளின் அடிப்படையில் ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, அதன் முடிவில் நான்கு பேருக்கு மட்டும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற நான்கு பேரும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனு மீதான விசாரணையின் முடிவில் நான்கு பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

