'அந்நிய வணிகக் கொள்கை 2023' வெளியீடு
புதுடெல்லி: வரும் 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஏற்றுமதியை இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் 'அந்நிய வணிகக் கொள்கை 2023'ஐ வெளியிட்டுள்ளது.
இதற்குமுன் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அந்நிய வணிகக் கொள்கை வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், இன்றுமுதல் நடப்பிற்கு வரும் புதிய அந்நிய வணிகக் கொள்கை எப்போதுவரை நடப்பில் இருக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.
மாறாக, தேவைப்படும்போது அது புதுப்பிக்கப்படும் என்று அந்நிய வணிகத் தலைமை இயக்குநர் சந்தோஷ் சாரங்கி கூறினார்.
நேற்றுடன் முடிந்த 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி US$760-770 பில்லியனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு சாரங்கி தெரிவித்தார். கடந்த 2021-22 நிதியாண்டில் அது US$676 பில்லியனாக இருந்தது.
கடைசியாக 2015 ஏப்ரல் 1ஆம் தேதி ஐந்தாண்டு அந்நிய வணிகக் கொள்கை நடப்பிற்கு வந்தது. ஆயினும், கொவிட்-19 பரவலாலும் அதனைத் தொடர்ந்து உலகளவில் பொருளியல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகளாலும் அக்கொள்கை பலமுறை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, புதிய அந்நிய வணிகக் கொள்கை ஃபரிதாபாத், மொராதாபாத், மிர்சாபூர், வாரணாசி என ஏற்றுமதி உன்னதத்திற்கு நான்கு புதிய நகரங்களை அடையாளம் கண்டுள்ளது. ஏற்கெனவே ஏற்றுமதி உன்னதத்திற்கான 39 நகரங்கள் உள்ளன.
அந்நிய வணிகக் கொள்கை மூலம் மின்வணிக ஏற்றுமதி அடையும் பயன்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. வரும் 2030வாக்கில் மின்வணிக ஏற்றுமதி US$200-300 பில்லியனாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தூதஞ்சல் சேவை (கூரியர்) மூலம் அனுப்பப்படும் பொருளுக்கான விலைமதிப்பு வரம்பும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சத்திற்கு உயர்த்தப்படுகிறது.
இந்திய ரூபாயை அனைத்துலக நாணயமாக அங்கீகரிக்கச் செய்யவும் அதன்மூலம் அனைத்துலக வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிபெறவும் புதிய அந்நிய வணிகக் கொள்கை முயல்கிறது.

