செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
df0dc84a-3222-4574-a9a2-24bb9e88fcb2
-

கொசுவத்தியால் அறுவர் உயிரிழப்பு

டெல்லி: இரவில் கொளுத்தி வைக்கப்பட்ட கொசுவத்தி படுக்கைமீது விழுந்து தீப்பற்றியதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் மூச்சுத்திணறி மாண்டுபோயினர். நள்ளிரவு நேரத்தில் கொசுவத்தி படுக்கைமீது விழுந்திருக்கலாம் எனக் காவல்துறை கூறியது. அதனால் கிளம்பிய நச்சுப் புகையால் அவர்கள் சுயநினைவை இழந்து, பின்னர் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்டது. தீக்காயத்திற்காக மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; ஒருவர் முதலுதவி பெற்று வீடு திரும்பிவிட்டார்.

ரூ.6 லட்சத்திற்கு இட்லி வாங்கினார்

ஹைதராபாத்: தென்னிந்தியர்களின் விருப்பமான காலை உணவாக விளங்கி வருகிறது இட்லி. இந்நிலையில், சென்ற ஆண்டு மட்டும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஆறு லட்ச ரூபாய்க்கு இட்லி வாங்கியதாக 'ஸ்விக்கி' விநியோகத் தளம் தெரிவித்துள்ளது. பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்றபோது தமக்காகவும் குடும்பத்தினர், நண்பர்களுக்காகவும் அவர் 8,428 தட்டு இட்லி வாங்கினார். மார்ச் 30ஆம் தேதி வியாழக்கிழமை உலக இட்லி நாள் கொண்டாடப்பட்ட நிலையில், சென்ற ஆண்டு மட்டும் 33 மில்லியன் தட்டு இட்லிகளை 'ஸ்விக்கி' விநியோகித்துள்ளது.

மனைவியுடன் உறவு; சிறை, அபராதம்

மலப்புரம்: மனைவியுடன் முறையற்ற வழிகளில் பாலியல் உறவுவைத்து துன்புறுத்தியதற்காக கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடவருக்கு ஓராண்டுச் சிறையும் ரூ.25,000 அபராதமும் விதித்து மஞ்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் அந்த 36 வயது ஆடவர் மேலும் மூன்று மாதங்களைச் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும். கடந்த 2010 முதல் 2015 வரை அவரின் மனைவி இத்தகைய பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியின் வயிற்றினுள் 2 கிலோ முடி

பிஜ்னோர்: பல ஆண்டுகளாகத் தலைமுடியைத் தின்றுவந்த 14 வயதுச் சிறுமியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் கிட்டத்தட்ட இரண்டு கிலோ முடியை அகற்றினர். உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரைச் சேர்ந்த அச்சிறுமி 'ரப்புன்ஸெல் சிண்ட்ரோம்' எனும் உளவியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அச்சிறுமி கடந்த பல ஆண்டுகளாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அவளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றுக்குள்ளிருந்த முடிக் கற்றைகள் வெளியே எடுக்கப்பட்டன.

பூங்காவிலிருந்த பெண்ணைக் கடத்தி காருக்குள் கூட்டுப் பாலியல் கொடுமை

பெங்களூரு: பூங்காவிலிருந்த பெண்ணை காருக்குள் இழுத்துப் போட்டு, நால்வர் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்ற மாதம் 25ஆம் தேதி பெங்களூரில் நிகழ்ந்தது. அங்குள்ள பூங்கா ஒன்றில் இரவு நேரத்தில் தம் நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தார் அப்பெண். அப்போது அவர்களை நெருங்கிய அக்கும்பலில் ஒருவன், இரவில் அங்கு அமரக்கூடாது என்று கூறினான். அதனையடுத்து, அப்பெண்ணின் நண்பர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். பின்னர் தம் நண்பர்களை அழைத்த அந்த ஆடவர், அவர்களோடு சேர்ந்து அந்தப் பெண்ணை காருக்கு இழுத்துச் சென்றார். சந்தேகப் பேர்வழிகள் நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

ஐந்து மில்லியன் லிட்டர் 'பீர்' அழிப்பு

திருச்சூர்: விற்கப்படாத 50 லட்சம் லிட்டர் 'பீர்' பானத்தைக் கொட்டி அழிக்க கேரள மாநில மதுபானக் கழகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாங்கப்பட்ட அவை ஆறு மாதங்களுக்குள் விற்கப்பட்டிருக்க வேண்டும். இதனால், கேரள அரசுக்கு 65-80 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.