தனியார் அமைப்புகள் வழங்கும் விருதுகளைப் பெறத் தடை
திருவனந்தபுரம்: அரசுத் துறைகளில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநில அரசின் அனுமதி இன்றி இனிமேல் தனிநபர்களும் தனியார் அமைப்புகளும் வழங்கும் விருதுகளை பெற்றுக்கொள்ளக் கூடாது என கேரளத் தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டு உள்ளார். இதனை மீறி நடக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
10 மாநிலங்களில் அதிக வெப்பநிலை
புதுடெல்லி: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் மாதம் வரை இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, "பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியானா ஆகிய 10 மாநிலங்களிலும் வெப்ப அலை வீசும் நாள்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி மேல்முறையீடு
புதுடெல்லி: அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து குஜராத் மாநிலம், சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். இதற்காக அவர் சூரத் செல்கிறார். சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையை அடுத்து, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
அம்பானி கலாசார மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினி, சச்சின்
மும்பை: இந்தியாவின் தொன்மையான வரலாற்றையும் கலா சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக மும்பையில் 52,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 'நீட்டா முகேஷ் அம்பானி கலாசார மையம்' ஞாயிறன்று திறக்கப்பட்டது. இவ்விழாவில் ரஜினிகாந்த், அமீர் கான், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
அவசர சிகிச்சை வாகனத்தில் மதுபானம் கடத்திய கும்பல்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 'சைரன்' ஒலியுடன் அவசர சிகிச்சை வாகனத்தில் மதுபானம் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்திய காவலர்கள், நோயாளி போல் நடித்த பெண், வாகன ஓட்டுநர் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பான காணொளியை உத்தரகாண்ட் காவல்துறை வெளியிட்டுள்ளது. டேராடூனில் இருந்து ரிஷிகேசுக்கு சென்ற அவசர சிகிச்சை வாகனத்தை மறைத்து சோதனையிட்டபோது, அதில் பெட்டி பெட்டியாக மதுபானம் இருந்ததைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தனர்.
கெஜ்ரிவால் மீண்டும் குற்றச்சாட்டு
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கல்லூரிச் சான்றிதழ் குறித்த முழு விவரங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது. இந்நிலையில், "குஜராத் பல்கலைக்கழகம் பிரதமரின் சான்றிதழ் குறித்து தகவல் வெளியிடாமல் இருப்பதற்கு இரு காரணங்கள் மட்டுமே இருக்கமுடியும். ஒன்று, ஆணவமாக இருக்கலாம் இல்லையெனில், அவரின் பட்டம் போலியானதாக இருக்கலாம். பிரதமர் கல்வியறிவு பெற்றவராக இருப்பது முக்கியம். ஏனெனில், அவர் நிறைய முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும்," என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

