செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b0e9be34-31c5-4083-9316-797a320f5cc1
-

ஒன்றரை மணி நேரம் மின்னிலக்க சாதனங்களை ஒதுக்கிடும் மக்கள்

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் மொஹித்யாஞ்சே வட்கான் கிராம மக்கள் தினமும் ஒன்றரை மணி நேரத்திற்கு தங்களது கவனத்தை மின்னணுச் சாதனங்களின் பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். இந்தப் பழக்கத்தை தவறாமல் கடைப்பிடித்து வரும் வட்கான் கிராமத்தினரைப் பற்றி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், மொஹித்யாஞ்சே வட்கான் கிராமத்தினர் 'டிஜிட்டல் டீடாக்ஸ்' முறையைக் கடைப் பிடிக்கின்றனர். தினமும் இரவு ஏழு மணிக்கு 'சைரன்' ஒலிக்கிறது. தொடர்ந்து கிராமமக்கள் தங்கள் கைப்பேசி, மடிக்கணினி, கைக்கணினி உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகின்றனர். இதனைக் கண்காணிக்க கிராமத்தில் சுற்றுக் காவல் குழுவும் ஒன்றும் செயல்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவர வழக்கில் 26 பேர் விடுதலை

காந்தி நகர்: குஜராத்தில் கடந்த 2002ல் கலோல், டிலோஸ் உள்ளிட்ட இடங்களில் 17 முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்குத் தொடர்பில் மொத்தம் 39 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 13 பேர் வழக்கு விசாரணையின்போது மரணம் அடைந்துவிட்டனர். ``குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் மீதான கொலை, பாலியல் வன்கொடுமை, வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான சாட்சியங்களும் ஆவணங்களும் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை,'' எனக் கூறி குற்றவாளிகள் அனைவரையும் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி லீலாபாய் சுதாசமா விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

36 பேரின் உயிரைப் பறித்த கட்டுமானப் பகுதி இடிக்கப்பட்டது

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ராம நவமியையொட்டி பாலேஷ்வர் மகாதேவ் கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணையில், பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோத கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கட்டுமானங்களை இடித்து அகற்றும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், காவலர்களின் பாதுகாப்புடன் அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி உள்ளதாக இந்தூர் ஆட்சியர் இளையராஜா தெரிவித்தார்.

ஆம் ஆத்மி, பாஜ கட்சிகளுக்கு இடையே நீடிக்கும் பனிப்போர்

புதுடெல்லி: ஆம் ஆத்மி, பாஜக இடையயான பனிப்போர் நீடித்து வருகிறது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில், "டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு சிசோடியாவுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் தொடர்புள்ளது," எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய்சிங் கூறுகையில்,

"பிரதமர் மோடியின் பட்டச்சான்றிதழ் 'போலி' என்று அம்பலமாகி விட்டால், தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல் அளித்து மோசடி செய்ததாக அவர் தனது எம்.பி. பதவியை இழப்பார். அத்துடன், தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் அவர் இழந்துவிடுவார். இதுதான் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை," என்று கூறியுள்ளார்.