புதுடெல்லி: அருணாச்சலப் பிரதே சம் மீதான தனது உரிமையை மீண்டும் நிலைநாட்டும் விதமாக, அங்கிருக்கும் 11 இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளது சீனா.
சீன, திபேத்திய, பின்யின் எழுத்துகளில் அந்த இடங்களுக்கு புதிய பெயர்களைச் சூட்டி சீனாவின் சிவில் விவகார அமைச்சு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரு குடியிருப்புப் பகுதிகள், இரு நிலப் பகுதிகள், இரு ஆறுகள் ஆகியன இருப்பதால் அதற்கான நிர்வாக அமைப்புகளையும் வகுத் திருப்பதாக சீன அரசின் குளோபல் டைம்ஸ் செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட அந்த 11 இடங் களும் தென் திபேத்தின் ஜங்னான் பகுதி என சீனாவால் அழைக்கப்படுகிறது என்றும் இப்படி பெயர் மாற்றம் செய்யப் பட்டிருப்பது மூன்றாவது முறை என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 2018 மற்றும் 2021ல் இதுபோன்று பெயர் மாற்றப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.
அருணாசலப் பிரதேச தலைநகர் இடாநகரில் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் ஜி-20 மாநாட்டுக் கூட்டம் நடந்தது. இதில் சீனா பங்கேற்காத நிலையில், அதற்கான காரணமும் சீன அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.
இந்தச் சூழலில் சீனாவின் பெயர் மாற்ற நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் ெதரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டுள்ள அறிக்கை யில், "அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இன்றளவும் உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதுடன் வருங்காலத்திலும் இதே நிலை தொடரும்," என்று தெளிவுப் படுத்தி உள்ளார்.
"சீனா இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதனை ஏற்க முடியாது. இந்தியாவில் இருந்து கைப்பற்ற முடியாத பகுதியாக இமாசலம் நீடிக்கும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டுவதால் உண்மையை மாற்ற முடியாது," எனக் கூறியுள்ளார்.