சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட 80 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாங்கை நாதுலாவுடன் இணைக்கும் ஜவகர்லால் நேரு சாலையில் 15வது மைல் பகுதியில் நேற்று மதியம் 12.20 மணியளவில் பயங்கர பனிச்சரிவு ஏற் பட்டது. இதில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கினர்.
இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்றன. தற்போதைய நிலையில், பனிச் சரிவில் சிக்கி 5 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
80க்கும் மேற்பட்டோர் பனிக் குவியலில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பனியின்கீழ் சிக்கிய 30 பயணிகள் மீட்கப்பட்டு காங்டாக்கில் உள்ள எஸ்டிஎன்எம் மருத்துவமனை, மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர் சோனம் டென்சிங் பூட்டியா கூறுகையில், "13வது மைல் வரை மட்டுமே சுற்றுப் பயணிகள் செல்ல அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் கட்டாயப்படுத்தி 15வது மைல் வரை அழைத்துச் செல்ல வைத்ததாக சொல்லப்படு கிறது. இதன் காரணமாக மிகப்பெரிய பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொள்ள நேரிட்டுள்ளது," என்றார்.