திருவனந்தபுரம்: கேரளாவில் அரிசி திருடியதாகக் கூறி இளையர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மது என்ற இளையர் அட்டப்பாடி பகுதியில் உள்ள கடை ஒன்றில் அரிசியைத் திருடியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் இளையர் மதுவை சரமாரியாக அடித்து உதைத்தனர். காவல்துறை அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லை. மது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மதுவை பலர் அடித்து சித்திரவதை செய்யும் காணொளிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவியது. நிராதவரான நிலையில் ஒருவர் உயிருக்குப் போராடுவதைக் கண்டுகொள்ளாமல் சிலர் மயக்க நிலையில் கிடந்த மதுவுடன் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டதும் அம்பலமானது.
இளையர் மதுவின் உடலை மருத்துவர்கள் உடல்கூராய்வு செய்தபோது, அவரது வயிற்றில் ஒரு துளி உணவுகூட காணப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு மூவாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என நீதிபதிகள் நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில், அவர்களில் 13 பேருக்கு ஏழு ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

