புதுடெல்லி: கடந்த 2014 முதல் இந்தியா புதுவேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. ஜனநாயகக் கொள்கைகளை பலப்படுத்த பாஜக பாடுபடுகிறது. நாட்டின் வளர்ச்சியே கட்சியின் நோக்கம் என்று பாஜகவின் 44வது நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கட்சியினருக்காக உரையாற்றியுள்ளார். அவர் உரையின் காணொளி நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் ஒளிபரப்பானது.
"ராமபக்தர் அனுமனின் பிறந்த நாள் இன்று. அனுமனுக்கும் பாஜகவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. மற்றவர்களுக்காக அனுமன் எதையும் செய்ய வல்லவர். ஆனால், அவர் தனக்காக எதையும் செய்துகொள்ளாதவர். இந்த இயல்புதான் பாஜகவை இயக்கிக்கொண்டிருக்கிறது.
"அனுமன் தனது சக்தியை உணர்ந்து கொண்டதுபோல இந்தியா தற்போது அதன் சக்தியை உணர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தேவையான உந்துதலை பாஜக அனுமனிடம் இருந்து பெறுகிறது.
"அனுமனின் முழு வாழ்க்கையையும் பார்த்தால் 'நம்மால் முடியும்' என்ற எண்ணம்தான் அவரது அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருந்துள்ளது.
"ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்கவும் சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும் பாஜக உறுதி பூண்டுள்ளது," என்று மோடி குறிப்பிட்டார்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சதி செய்து உள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
சிறிய அளவிலான இலக்குகளையே நிர்ணயித்து அதிலேயே அவை திருப்தி அடைந்து விடுகின்றன. மிகப்பெரிய கனவுகளைக் காண்பதிலும் மிகப் பெரிய இலக்குகளை அடைவதிலும் பாஜக நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எண்ணியதில்லை என்றார் மோடி.
உலகின் மிகப்பெரிய கட்சி என்று அழைக்கப்படும் பாரதிய ஜனதா கட்சி 1980ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது. 1984 நாடாளுமன்றத் தேர்தலில் இரு இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி, இன்று 300 இடங்களுடன் வலிமையான கட்சியாக வளர்ந்துள்ளது.

