புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தொடங்கி 3 நாள்களுக்கு உகாண்டா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தில் உகாண்டா வெளியுறவு அமைச்சர் ஜேஜே ஒடாங்காவை அவர் சந்தித்துப் பேசு கிறார்.
உகாண்டாவின் இதர அமைச்சர்களையும் அவர் சந்திக்கவிருக்கிறார்.
இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உகாண்டாவில் வர்த்தக மற்றும் தொழில்துறை சமூகத்தினர் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றுகிறார். மேலும் இந்திய வம்சா வளியினருடனும் அவர் உரையாடுகிறார்.
இதையடுத்து வருகிற 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாள்கள் மொசாம்பிக் நாட்டில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொசாம்பிக் குடியரசு நாட்டுக்குச் செல்லும் முதல் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொசாம்பிக்கில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்களை அவர் சந்திக்கிறார்.
மொசாம்பிக்கில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாடவிருக்கிறார்.
உகாண்டா மற்றும் மொசாம்பிக் நாடுகளில் மேற்கொள்ளும் அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தினால் இரு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் வலுப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

