புதுடெல்லி: சீனாவுக்குப் பதிலடி தரும் விதமாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளுக்கு இன்று வருகையளிக்கிறார்.
இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தையும் சீனா விட்டுவைக்கவில்லை. தமக்குரியது என்று அது சொந்தம் கொண்டாடி வருகிறது.
மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களைச் சூட்டி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு கடந்த 4ஆம் தேதி சீன அரசாங்கம் புதிய பெயர்களைச் சூட்டியது.
இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
"அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டு வதால் உண்மையை மாற்றிவிட முடியாது," என்று இந்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் சீனாவுக்குப் பதிலடி தரும் விதமாக அருணாச்சல பிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் 'துடிப்பான கிராமங்கள் திட்டம்' (வி.வி.பி.) என்ற புதிய திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 455 எல்லையோர கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் புதிய திட்டத்தின்படி மேம்படுத்தப்படும்.
இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட், லடாக் ஆகிய பகுதிகளிலும் துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை ரூ.4,800 கோடி செலவிடப்பட உள்ளது.
சீனாவுடன் 14 நாடுகள் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த 14 நாடுகளுடனும் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. மேலும் தென் சீனக் கடல் பகுதியையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதன் காரணமாக சீனாவுக்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குப் பக்கபலமாக இருப்போம் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

