ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இவருக்கும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இவர்களுக்கு மோதல் ஏற்படும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி மேலிடம் தலையிட்டு இருவரையும் சமரசம் செய்து வந்தது.
தற்பொழுது மோதலின் உச்சகட்டமாக அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுத் தொடர்ந்தார்.
இதில் திரு பைலட் முந்தைய வசுந்தராராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தற்போதைய அரசு தவறி விட்டது என்றும் இதில் 2018ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியைப் பூர்த்தி செய்ய வேண்டியது காங்கிரசின் கடமை என்றும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சச்சின் பைலட் தெரிவித்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி மேலிடம் எடுத்த முயற்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தான் அறிவித்தபடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று சச்சின் பைலட் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்தப் போராட்டத்தில் பைலட்டின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவரே போராட்டத்தில் இறங்கியுள்ளது காங்கிரசுக்குப் பெரும் தலைவலியை கொடுத்து உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குப் பொறுப்பாளராக இருக்கும் சுக்ஜிந்தர் சிங் அமைதியாக இருக்கும்படி சச்சின் பைலட்டை கேட்டுக்கொண்டுள்ளார். பிரச்சினைக்குத் தீர்வுகாண பேச்சுாவார்த்தைக்கும் அவரை அழைத்துள்ளார் சுக்ஜிந்தர்.
முன்னதாக, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக் கட்சிக்கு எதிரான ஒன்று என காங்கிரஸ் கட்சி வர்ணித்திருந்தது.
ராஜஸ்தானில் முந்தைய பாஜக ஆட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சச்சின் போராட்டத்தை துவங்கியிருந்தாலும் இது உண்மையில் முதல்வர் கெலாட்டுக்கு எதிரான போராட் டமாகவே அரசியல் கவனிப்பாளர் களால் பார்க்கப்படுகிறது.

