எதிர்க்கூட்டணிக்கு தீவிர முயற்சி
புதுடெல்லி: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நாடாளு மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். நேற்று முன்தினம் டெல்லி சென்ற அவர் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் நிதிஷ் குமார் நேற்று சந்தித்தார். அப்போது அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உடனிருந்தனர். தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்தனர்.
கூடுதல் உதவி நாடும் உக்ரேன்
புதுடெல்லி: கூடுதல் மனிதாபிமான உதவிகள் வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி கடிதம் எழுதி உள்ளார். இந்தியா வந்துள்ள உக்ரேன் வெளியுறவு துணை அமைச்சர் எமின் ஜபரோவா இந்தக் கடிதத்தை இந்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் வழங்கினார். அக்கடிதத்தில், உக்ரேனுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவி வழங்க வேண்டும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
4,000 சிறப்பு ரயில் சேவை
புதுடெல்லி: கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் 217 சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் கூடுதலாக 4,010 சிறப்பு சேவைக்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளன. இருக்கைகளை முடக்கி வைத்தல், அதிகக் கட்டணம் வசூலித்தல், இடைத்தரகர் களின் குறுக்கீடு போன்ற முறைகேடுகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

