புதுடெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
'ரோஜ்கார்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை 2022 அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி வைத்தபோது அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75,000 பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவை வழங்கினார். இந்தத் திட்டம் இளைய தலைமுறையினரிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு முறையும் 70,000க்கும் மேற்பட்டோர் மத்திய அரசில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகிறார்கள்.
பிரதமர் மோடி, இன்று (ஏப்ரல் 13) காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் 71,000 பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன உத்தரவை வழங்க இருக்கிறார்.
புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள், 'கர்மயோகி பிரராம்ப்' என்கிற இணைய வாயிலான பயிற்சித் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற பின்னர் வேலையைத் தொடங்க வேண்டும். இந்தப் பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், மனிதவளக் கொள்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

