திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் கோவில் அமைந்துள்ள பதனம்திட்டா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க கேரள மாநில அரசு முயற்சி எடுத்தது.
அதற்கான நிலத்தையும் தேர்வு செய்து அதன் விவரங்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு கேரள அரசு அனுப்பி வைத்தது.
இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறையினர் முதற் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
அவர் கூறுகையில், "சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க தேவையான அனுமதி கிடைத்துள்ளதால் அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கி விட்டன. நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டதால் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். பதனம்திட்டா மாவட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மாநில அரசின் 100 நாள் திட்டத்தின்கீழ் இங்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

