ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுலி மாவட்டத்தில் உள்ள மந்தராயல் பகுதியில் பன்னே சிங் என்ற நபர் தமது மனைவி விமல் பாயுடன் வசித்து வருகிறார். பன்னே சிங் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வருபவர்.
இவர் சில நாட்களுக்கு முன்னர், மனைவியுடன் தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுக்க சம்பல் ஆற்றுக்குச் சென்றார்.
பன்னே சிங் ஆற்றில் இறங்கியபோது, திடீரென ஒரு முதலை வந்து அவரது காலைக் கடித்து தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.
சற்று தொலைவில் இருந்த விமல் பாய் கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார். அவள் தைரியமாகச் சென்று கணவனின் காலை விடுவிப்பதற்காக முதலையைத் தடியால் அடித்தார்.ஆனாலும், முதலை விடவில்லை. இன்னும் தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.
மேலும் தைரியத்துடன் விமல் பாய் முதலையின் கண்ணில் குச்சியால் குத்தினார். இதனால், முதலை தனது பிடியை விட்டு பன்னே சிங்கின் காலை விடுவித்தது.
இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பத்திரமாக கரைக்கு வந்தனர்.
விமல் பாயின் சாகசத்திற்குப் பலரும் பாராட்டுத் தெரித்து வரு கின்றனர்.

