கம்பாலா: உகாண்டா நாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 10ஆம் தேதி புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இந்திய சமூகத்தினர் முன் உரையாற்றினார்.
அவர் பேசும்போது, புதிய இந்தியா உருவாகி வருவது பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவிற்கு எதிராக பல்லாண்டுகளாக எல்லை கடந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட சக்திகளுக்கு தற்போது உள்ள இந்தியா வேறுபட்டது என்றும் நாம் புரிய வைத்துள்ளோம்.
அந்தச் சக்திகளுக்கு நாம் சரியான பதிலடி கொடுப்போம் என்றும் தற்போது தெரிந்திருக்கும் என்றார் திரு ஜெய்சங்கர். உரி அல்லது பாலகோட் என நாட்டின் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும் வேறுபட்ட இந்தியாவை மக்கள் இன்று பார்க்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு உரி பகுதியில் இந்திய ராணுவ தலைமையகத்திற்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தினர் ஊடுருவி தாக்குதல் நடத்திய நிகழ்வையும் 2019ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் உள்ள பாலகோட் நகரில் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய நிகழ்வையும் அவர் சுட்டினார்.
கடந்த 30 ஆண்டுகளாக ஒப்பந்தங்களை மீறி பெரும் படைகளை சீனா குவித்து வந்துள்ளது.
ஆனால், இன்று இந்திய ராணுவ வீரர்கள் மிக உயர்ந்த பகுதிகளில், கடுங் குளிரிலும் திரளாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

