புதுடெல்லி: போரினால் உக்ரேனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் தகுதித் தேர்வினை எழுத அனுமதி வழங்கப்படும் என்று உக்ரேன் அறிவித்துள்ளது.
உக்ரேனில் ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தனர்.
அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை உருவானது. அதைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் அங்கு தங்கள் மருத்துவ படிப்பைத் தொடர முடியாத சூழல் உருவானது.
அந்த மாணவர்களை இந்தியாவுக்கு பத்திரமாகத் திரும்ப அழைத்து வருவதே பெரும் சவாலானது. பின்னர் நாடு திரும்பிவிட்ட அந்த மாணவர்கள், தங்கள் மருத்துவப் படிப்பை தொடர முடியாத சூழல் உருவானதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.
அப்போது, உக்ரேனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்தப் பின்னணியில் தற்பொழுது உக்ரேனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இறுதி ஆண்டுத் தேர்வு எழுத இந்தியாவில் ஒருமுறை வாய்ப்புத் தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், உக்ரேன் துணை வெளியுறவு அமைச்சர் எமின் தபரோவா இந்தியாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டார். அவர் இந்திய வெளியுறவுச் செயலாளர் சஞ்சய் வர்மாவுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, உக்ரேனில் மருத்துவ படிப்பைத் தொடர முடியாமல் போன இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் நாட்டில் ஒருங்கிணைந்த தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரேன் அனுமதிக்கும் என்று தெரிவித்தார்.
இதை இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகையால், உக்ரேனில் மருத்துவம் படித்து வந்த ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்களும் பலன் பெறுவார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

