கோல்கத்தா: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மேற்குவங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
வங்காளப் புத்தாண்டை முன்னிட்டு அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைச்சரின் வருகைக்கு முன்பாக அந்தப் பகுதியில் இருந்து 3,400 வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிர்பூம் மாவட்டத்தின் குஸ்லாரா பகுதியில் உள்ள புற வழிச் சாலையில் ஒரு செங்கல் சூளை அருகே மர்மமான முறையில் கார் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் அதைச் சோதித்தபோது காருக்குள் வெடிபொருள்கள் நிரம்பிய 17 பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒவ்வொரு பெட்டியிலும் 200 வெடிபொருள்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து வெடிபொருளை செயலிழக்கச் செய்யும் வல்லுநர் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
காவல்துறையினர் அந்த காரை கைப்பற்றியுள்ளனர். சிறப்புப் படையினர் அது குறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நேற்று மாலை நிலவரப்படி யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், மகமது பஜார் பகுதியில் நடத்திய சோதனையில் 81,000 வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுகுறித்த விசாரணை முடிவுறாத நிலையில் நேற்று வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

