செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
83fd86ac-8035-4f04-8a5a-5d6d82bba3f6
-

அசாமில் எய்ம்ஸ் மருத்துவமனை

கௌஹாத்தி: அசாம் மாநிலத்தின் கௌஹாத்தி நகரில் கட்டப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ரூ.1,123 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில் 750 படுக்கைகள் உள்ளன. வடகிழக்கு இந்தியாவில் உள்ள மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் அது அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி கூறினார். ஏறத்தாழ ரூ.14,300 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட

ஒரு கோடி ரூபாய் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 கோடி பணத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் தொடர்பில் வழக்குப் பதிவு செய்ததுடன் வருமான வரித்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அந்தப் பணம் குறித்து இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறினர். கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் ஆட்டோவில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி முதல்வருக்கு கோவா காவல்துறை அழைப்பாணை

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இம்மாதம் 27ஆம் தேதி நேரில் வரும்படி கோவா காவல்துறை அழைப்பாணை விடுத்துள்ளது. சென்ற ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேர்தலின்போது பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு வரும்படி இவ்வாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் கோவாவில் இரண்டு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அதற்கான கொண்டாட்டத்தில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.