புதுடெல்லி: இந்தியாவில் ஆண் துணையின்றி 45 வயதுக்கு மேற்பட்ட 4,000 பெண்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தியாவின் ஹஜ் குழு மூலமாக 1.4 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இவர்களில் மொத்தம் 65,600 பேர் பெண் யாத்திரிகர்கள் ஆவர்.
அறுபது வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களில் 15,753 பெண்களும், 81 முதல் 90 வயது உட்பட்டவர்களில் 222 பெண்களும், 91 முதல் 100 வயதுக்குட்பட்டவர்களில் ஏழு பெண்களும் உள்ளனர்.
இரண்டு பெண்களுக்கு 100 வயதுக்கு மேல் ஆகிறது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஆண் துணையில்லாமல் 4,313 பெண்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
மொத்தம் 25 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அவர்கள் செல்கின்றனர்.
இதில் முதல் இடத்தில் உள்ள கேரளாவிலிருந்து 2,807 பெண்கள் செல்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 195 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
உத்தரபிரதேசத்தில் இருந்து 222 பேரும் மகாராஷ்டிராவிலிருந்து 162 பேரும் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஹஜ் பயணத்துக்கான முதல் விமானம் மே மாதம் 21ஆம் தேதி புறப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கையை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சு வெளியிட்டது. ஆண் துணை இல்லையென்றாலும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவர்களுக்கு தனியாக தங்கு மிடம் வழங்கப்படும் என்றும் சென்னை உள்பட 25 விமான நிலையங்களில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

