ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் சிறுமி, பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார்.
கத்துவா மாவட்டத்தில் லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சீரத்நாஸ், தனது கோரிக்கையை காணொளியாகப் பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
"மோடிஜி, நான் இங்கு அரசுப் பள்ளியில் படித்து வருகிறேன். தயவுசெய்து எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள்.
"தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள். எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள்.
"எங்கள் பள்ளி இருக்கும் பெரிய கட்டடத்தை உங்களுக்கு காட்டுகிறேன். இந்தக் கட்டடம் 5 வருடங்களாக அழுக்காக இருக்கிறது. தரையில் உட்கார்ந்தால் எங்களுடைய சீருடைகள் அழுக்காகி விடுகிறது.
"சீருடை அழுக்காகிவிட்டால் அம்மா எங்களை அடிக்கிறார். தயவு செய்து மோடிஜி பள்ளியின் உட்கட்டமைப்பை அழகாக கட்டி கொடுங்கள் என உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்," என்று காணொளிப் பதிவில் சிறுமி பேசியுள்ளார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
ஏறக்குறைய 20 லட்சம் பேருக்கு மேல் காணொளியைப் பார்த்துள்ளனர்.

