45 மணி நேரத்தில் மனைவியை
கண்டுபிடித்த காங்கிரஸ் நிர்வாகி
புதுடெல்லி: உத்தரப்பிரசேத மாநிலம் ராம்பூர் நகரசபை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகியான மமுன் ஷாகான் கவலை அடைந்தார்.
அந்தப் பதவியை விட்டு கொடுக்க விரும்பாத அவர் உடனடியாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அறிவிப்பு வெளியான 45 மணி நேரத்தில் மணப்பெண் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ஒருவரை அவர் கண்டுபிடித்தார். அந்தப் பெண்ணை உடனடியாக அவர் திருமணமும் செய்துகொண்டார். தேர்தலில் தனது மனைவியை அவர் போட்டியிட வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தேர்தல் மன்னன்' பத்மராஜன்
234வது முறையாக போட்டி
பெங்களூரு: தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைவதை ஒரு வேலையாக வைத்துள்ள 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், 234வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் சிக்காவி தொகுதியில் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஏற்கெனவே அதிபர் தேர்தலில் ஆறு முறை மனுத் தாக்கல் செய்துள்ளார். முக்கிய தலைவர்களான நரசிம்ம ராவ், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்த கவுடா, பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை எதிர்த்து அவர் போட்டியிட்டுள்ளார்.
வானூர்தி மூலம் வந்து இறங்கிய
மூன்று கிலோ போதைப் பொருள்
புதுடெல்லி: இந்திய-பாகிஸ்தான் எல்லையோரமாக அமிர்சரசில் தரையிறங்கிய வானூர்தியில் மூன்று கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
அந்த வானூர்தி பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கும் என நம்பப்படுகிறது. பச்சிவின்ட் கிராமத்தில் கோதுமை வயலில் இறங்கிய வானூர்தியிலிருந்து 3.2 கிலோ கஞ்சாவை இந்திய எல்லைக் காவல் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

