சிபிஐ தலைமையகத்தில் முன்னிலையான டெல்லி முதல்வர்
புதுடெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகப் பரவிய, உறுதி செய்யப்படாத தகவலால் அரசியல் களத்தில் பரபரப்பு நிலவியது.
புதிய மதுபானக் கொள்கை முறைகேட்டால் டெல்லி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ சாடியுள்ளது. இதையடுத்து சிபிஐயின் அழைப்பாணையை ஏற்று, நேற்று அதன் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு நேரில் முன்னிலையானார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்த முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது. சிபிஐ மேற்கொண்ட கைது நடவடிக்கையை அடுத்து, மணிஷ் சிசோடியா துணை முதல்வர், அமைச்சர் பதவிகளில் இருந்து விலகினார்.
இந்த முறைகேடு காரணமாக டெல்லி அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது சிபிஐயின் குற்றச்சாட்டாகும்.
இதனிடையே, இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்வரின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கும் தொடர்புள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
அதையடுத்து அவரும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமலாக்கத்துறையும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடமும் சிபிஐ நேற்று விசாரணை நடத்தி உள்ளது. அவரை மத்திய அரசு குறி வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சாடியுள்ளனர்.
நேற்று விசாரணைக்குச் செல்லும் முன்னர் காணொளி ஒன்றை வெளியிட்டார் முதல்வர் கெஜ்ரிவால். அதில் சிபிஐ மிகவும் சக்திவாய்ந்த அமைப்பு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
"என்னைக் கைது செய்ய வேண்டும் என பாஜக சொன்னால் சிபிஐ அதைச் செய்யும். சிபிஐ நினைத்தால் யாரை வேண்டுமானாலும் சிறைக்கு அனுப்ப முடியும்," என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தலைமையகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சிபிஐ தலைமையகத்துக்குச் செல்லும் முன்னர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் கெஜ்ரிவால்.
இதற்கிடையே, முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்கள் நேற்று மாலை டெல்லியில் சந்தித்துப் பேசினர்.
அப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது. இதனால் டெல்லியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதாக ஊடகங்கள் தெரிவித்தன.