'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற 19 வயது கல்லூரி மாணவி நந்தினி
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா 'மிஸ் இந்தியா 2023' அழகிப் பட்டத்தை வென்றுள் ளார். 19 வயதான அவர், அடுத்த மாதம் ஐக்கிய அமீரக சிற்றரசில் நடைபெறும் உலக அழகிக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார். வணிக மேலாண்மை பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நந்தினி, வாழ்வில் எழுகின்ற சவால்களைக் கற்றலுக்கான வாய்ப்புகளாகக் கருதி அவற்றை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறுகிறார். தொழிலதிபர் ரத்தன் டாடாவை தமது முன்னுதாரணமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
விவசாயியை மணக்கும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை
பெங்களூரு: கர்நாடகாவில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள இளையர்களைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ஊக்கத் தொகையாக இரண்டு லட்சம் வழங்கப்படும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் தேவகவுடா அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேவகவுடா, விவசாய தொழிலாளிகளின் குடும்பத்துக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும், பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி, கல்லூரி மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும் அவரது கட்சி தெரிவித்துள்ளது.
காவலரை காரில் 20 கி.மீ. இழுத்துச் சென்ற போதை ஓட்டுநர் கைது
மும்பை: போக்குவரத்து காவலரை இருபது கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற ஓட்டுநரை மும்பை காவல்துறை கைது செய்தது. நேற்று முன்தினம் நவி மும்பை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார் போக்கு வரத்து காவலர் நாயக் மாலி. அப்போது அவ்வழியே சென்ற ஒரு காரை நிறுத்திய அவர், ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டார். மது போதையில் இருந்த அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதை அடுத்து நாயக் மாலியும் அவருடன் இருந்த மற்றொரு காவலரும் காரை சோதனையிட முயன்றனர். அப்போது அந்த ஓட்டுநர் திடீரென காரை இயக்கி அங்கிருந்து புறப்பட முயன்றார். அப்போது கார் தன் மீது மோதுவதைத் தவிர்க்க, எகிறிக் குதித்த நாயக் மாலி, காரின் முன்பகுதியை தன் கைகளால் இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். ஆனால் போதை ஓட்டுநர் காரை நிறுத்துவதாக இல்லை. சுமார் இருபது கிலோ மீட்டர் தூரம் நாயக் மாலிக்கை அவர் இழுத்துச் சென்ற நிலையில், போக்குவரத்து காவல்துறை யினர் மற்றொரு வாகனத்தில் விரட்டி வந்து காரை மடக்கி நிறுத்தினர். பின்னர் நாயக் மாலி மீட்கப்பட்டார்.
கொரோனாவால் இறந்ததாகக் கருதப்பட்டவர் உயிருடன் திரும்பினார்
போபால்: கொரானா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் திடீரென உயிருடன் வந்ததால் அவர் குடும்பத்தார் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான கமலேஷ் என்பவர் குஜராத் சென்றிருந்தபோது கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உறவினர் கள் அங்கு சென்று, முழுவதும் துணியால் மூடப்பட்டிருந்த கமலேஷின் உடலைப் பெற்று அங்கேயே இறுதிச்சடங்கு களையும் செய்து முடித்தனர். இந்நிலையில், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அதிகாலை தமது தாய்வழி உறவினர் ஒருவரது வீட்டுக்கதவை அதிகாலை வேளையில் தட்டியுள்ளார் கமலேஷ். கதவைத் திறந்து பார்த்த உறவினருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. கமலேஷ் உயிருடன் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எங்கு இருந்தார், என்ன செய்தார் என்பதை கமலேஷ் இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளனர்.

