வாஷிங்டன்: மின்னிலக்கப் பணம் எனப்படும் 'கிரிப்டோ கரன்சி' தொடர்பான பிரச்சினைகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விவகாரம் ஜி20 நாடுகளிடையே முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளதாக வாஷிங்டனில், 'கிரிப்டோ சொத்துகளின் தாக்கங்கள்' என்ற தலைப்பில் நடந்த கூட்டடத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இத்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான அவசரம் குறித்து உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து உள்ளதாகத் தெரிவித்த அவர், கொள்கை, ஒழுங்குமுறை கட்டமைப்பின் முக்கிய கூறுகளை வெளிக்கொணர்வதில் அனைத்துலக நாணய நிதியம், நிதி நிலைத்தன்மை வாரியம் ஆகியற்றின் பணியை ஜி20 அங்கீகரிக்கிறது என்றார்.
"வளர்ந்து வரும் சந்தைகள், வளரும் பொருளாதாரங்கள் உள்பட முழு அளவிலான அபாயங்களை உலக நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும். மின்னிலக்க பணம் சார்ந்த சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு புதிய விதிமுறைகளும் உலகளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.