பாட்னா: விஷ சாராயம் அருந்திய இருபது பேர் பலியான சம்பவம் பீகாரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் மருத்துவ மனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கிழக்கு சாம்பாரான் மாவட்டத்தில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள லட்சுமிபூர், முஷார் தோலி உள்ளிட்ட சிற்றூர்களைச் சேர்ந்த சிலருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் உள்ளி்ட்ட பாதிப்புகளை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் 24 மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் இருபது பேர் சிகிச்சை பலனளிக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவருமே விஷ சாராயம் அருந்தியது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த கலால்துறை அதிகாரி தலைமையில் தனிப்படை ஒன்று சம்பவம் நிகழ்ந்த சிற்றூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணையை அடுத்து, விஷ சாராயம் காய்ச்சிய குற்றச்சாட்டின் பேரில் 12 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பீகாரில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அவ்வப்போது விஷ சாராயத்தை அருந்தி பலர் உயிரிழப்பது நீடித்து வருகிறது.

