சண்டிகர்: காவல்துறையால் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய நண்பரைப் பஞ்சாப் காவல்துறை கைது செய்துள்ளது.
பஞ்சாபைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற சமய அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவரது அமைப்புக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அவரைக் கைது செய்ய காவல்துறை முயன்றபோது, திடீரென தலைமறைவானார் அம்ரித்பால் சிங்.
பல இடங்களில் தேடியபோதும் அவர் சிக்கவில்லை. நாள்தோறும் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு காவல்துறையிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் அம்ரித்பால் சிங் பதுங்கி இருக்க அவரது நெருக்கமான நண்பர் ஜோகா சிங் என்பவர் உதவியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் பஞ்சாப் காவல்துறை அவரைக் கைது செய்தது.

