மும்பை: விருது விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்களில் 11 பேர் வெயில் தாங்காமல் மாண்டுபோன சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது.
ஆன்மிகத் தலைவரும் சமூக ஆர்வலருமான அப்பாசாகிப் தர்மாதிகாரிக்கு 'மராட்டிய பூஷண்' விருது வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பெருந்திடலில் காலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டபோதும் முற்பகல் 11.30 மணிக்குத் தான் நிகழ்ச்சி தொடங்கியது. கிட்டத்தட்ட 38 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்ததால் வெப்பம் தாங்காமல் பலரும் மயங்கி விழுந்தனர்.
பலர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு கூடலாம் என அஞ்சப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரைச் சந்தித்த முதல்வர் ஷிண்டே, மாண்டோரின் குடும்பத்தார்க்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்தவில்லை எனச் சாடிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சம்பவம் குறித்து விசாரிக்கப்போவது யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வானிலை மையம் எச்சரிக்கை
இதனிடையே, மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் இவ்வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

